யாருக்கு நம் ஓட்டு?

மாபெரும் கேள்வி இது.

யாருக்கு நம் ஓட்டு?

இன்று நடந்து கொண்டு இருக்கும், இந்த கூத்தை நாம் டிவியில் பார்க்கிறோம்; சாலைகளில் பார்க்கிறோம்; பேப்பர்களில் படிக்கிறோம்.

உண்மையில் இவர்களில் யாருக்கு நாம் ஓட்டு போடுவது என்கின்ற குழப்பம் என் மனதிலும் நிறைய தோன்றுகிறது.

ஒரு கட்சி காரர் சாலைகள் போடுகிறேன் என்கிறார்; இன்னொருவர் வீடு கட்டி கொடுக்கிறேன் என்கிறார்; இலவசங்களை அள்ளி தருகிறேன் என்கிறார். என்ன செய்கிறார்கள் இவர்கள்? என்ன செய்ய போகிறார்கள் இவர்கள்?

இதை பார்க்க பார்க்க, எனக்கு ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது.

இவர்கள் யாருக்கும், ஒரு சட்ட மன்ற உறுப்பினரின் வேலை என்ன என்றே தெரியவில்லை என்பது தான் அது!

இவர்களுக்கு தான் தெரியவில்லை; ஓட்டு போடும் மக்களுக்கு தெரிகிறதா என்று பலரிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால்:

1. அரசியல் வாதிகளுக்கு ஆட்சி நடத்த தெரியவில்லை.
2. எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சிறப்பான ஒரு தலைவர் இல்லை. அதனால், ஒரு சிறப்பான ஆட்சியை அமைக்காமல் இருக்கிறார்கள்.
3. நல்லவர்கள் இல்லை. எல்லோரும் கொள்ளை அடிப்பவர்கள்!
4. சாலைகள் சரியாக இல்லை. தண்ணீர் இல்லை. அடிப்படை வசதிகள் எதையும் இந்த அரசியல் கட்சிகள் செய்து தரவில்லை.

இப்படி பலப்பல வேலைகளை அடுக்கிக் கொண்டே போனார்கள்.

நான் அவர்களிடம் கேட்டேன். ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வேலை என்ன? இதை எல்லாம் செய்ய வேண்டும் என்றால் அவர் 'எங்க வீட்டு பிள்ளை' எம்ஜிஆரை போல கையில் ஒரு சாட்டையுடன் தான் வலம் வர வேண்டும்!

அதுவா நீங்கள் அவரிடம் இருந்து எதிர் பார்க்கிறீர்கள்? இந்த எதிர்பார்ப்பும் கூட சில பேருக்கு இருக்கின்றது. ஒரு சர்வதிகாரி வேண்டும் என்று சொல்லுவார்கள்!

அன்று என் வீட்டு தண்ணீர் உடன், சாக்கடை நீரும் கலந்து வந்துவிட்டது. நான் மாநகராட்சிக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக முதலில் பிரச்சனையை அனுப்பினேன். தொடர்ந்து ஆட்சியாளரின் எண்ணுக்கும் போன் செய்தேன். காலை ஏழு மணி; யாரும் போனை எடுக்கவில்லை. பத்து மணிக்கு பிறகும், அதே நிலமைதான். அன்று மதியம் பன்னிரண்டு மணி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

நான் அடுத்த போனை பத்திரிக்கை நிருபர்களுக்கு செய்தேன்.

இரண்டு மணி நேரம். நான்கு பத்திரிக்கை நிருபர்கள் என் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்! நடந்ததை பார்த்தார்கள். சக்கடை தண்ணீரும் அதன் நாற்றம் நீர் தொட்டி பூராவும் பரவி இருந்ததைப் பார்த்தார்கள். அனுபவித்தார்கள்.

அடுத்த நாள் காலை பத்திரிக்கைகளில் போட்டோவுடன், இதைப் பற்றி செய்தி வெளியானது!

முதலில் என் வீட்டு கதவை தட்டியவர், எங்கள் வார்டு கவுன்சிலர்!

'ஏங்க, என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா? நான் பார்த்துக்க மாட்டேனா?'

உடனடியாக போன் யாருக்கோ போட்டார். அந்த ஏரியா தண்ணீர் அளிக்கும் மேற்பார்வையாளர் மற்றும் குழாய் வேலை செய்பவர் என்று, இரண்டு மூன்று பேரை வரவழைத்தார். அவர்கள் நான்கு நாட்கள் வேலை செய்து அதை சரி செய்தார்கள்.

இதன் பிறகு, ஒவ்வொரு பிரச்சனைக்கும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் என் வீட்டிற்கு வருவார். தண்ணீர் பிரச்சனை; மரங்களை பரமாரிப்பதில் பிரச்சனை; சாலை பிரச்சனை. எல்லா பிரச்சனைகளுக்கும் அவர் ஓடி வந்து நிற்பார். எனக்கு பார்ப்பதற்கு பாவமாக இருக்கும். அவர் ஒரு பெண் வேறு! அவரை கஷ்டப்படுத்துவதாக எனக்கு தோன்றும்.

அன்று ஒரு நாள், இரவு பத்து மணிக்கு அவரும், அவர் உதவியாளரும் ஏதோ ஒரு பிரச்சனைக்காக வந்து பார்த்தார்கள். என்னால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அன்று சொல்லிவிட்டேன்.

'ஏங்க வேலை செய்வதற்கு சிப்ட்டு போட்டு உட்கார்ந்து இருக்காங்களே, அவர்கள் ஏன் வருவதில்லை. அவர்கள் தானே வேலை செய்ய வேண்டும்? நீங்க ஏங்க இப்படி ஓடி வர்றீங்க? எனக்கு கஷ்டமா இருக்கு', என்றேன்.

'அவர்கள் வருவார்கள். அவர்கள்தான் செய்வார்கள்! நாம சொன்னாத்தான் செய்வார்கள்', என்றார்.

அந்த கவுன்சிலருக்கு அவருடைய வேலை என்ன என்பது தெரியவில்லை என்பது தான் உண்மை! அந்த மாநகராட்சி வேலையாட்களின் வேலையை அவர் செய்து கொண்டு இருக்கிறார்! சாலைகள் சரியாக இருப்பது யாருடைய பொறுப்பு? தண்ணீர் ஒழுங்காக வர செய்வது யாருடைய வேலை?

கவுன்சிலரின் வேலை என்ன? கமிஷ்னர் அல்லது ஆட்சியாளரின் வேலை என்ன? இதை நாமும் புரிந்து கொள்ளவில்லை. நம் உறுப்பினர்களும் புரிந்து கொள்ளவில்லை. அதனால் தான் நம் நாட்டில் முன்னேற்றமும் நமக்கு அரசு செய்யும் பணிகளும் சிறப்பாக அமையாமல் போய்விட்டது.

இதே பிரச்சனைத்தான் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இருக்கிறது. நமது வேலைகளை, தேவைகளை நேரடியாக அவர்கள் செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதனால், இதை தெரிந்து வைத்து உள்ளவர்கள் கூட, தங்கள் வேலையை செய்யாமல், செயல் படுத்துவோரின் (Executiveவின்) வேலையை செய்கிறார்கள்.

நாம் அவர்களுடைய வேலையை புரிந்து கொள்ளாதது தான் காரணமாக இருக்கிறது.

இது தெரிந்தால் தான் நாம், ஓட்டு யாருக்கு போடுவது என்பதை சரியாக முடிவு செய்ய முடியும்.

அடுத்த கட்டுரையில் தொடர்கிறேன்!

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்?

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயகாந்தன் படித்தேன்.