யாருக்கு நம் ஓட்டு - பாகம் 2.

நம் வேலை என்ன?
நம் மாமன்ற, சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன?
இதையெல்லாம் புரிந்த கொள்ள வேண்டும் என்றால், நாம் நமது குடியரசு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த குடியரசு ஒரு மாபெரும் இயந்திரம்! மக்களாலும் சட்டங்களாலும் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயந்திரம். இது மக்களால் உபயோகப்படுத்தப்படும், சட்டங்களுக்கு உட்பட்டு. சட்டங்கள் இந்த இயந்திரம் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதை சொல்லும்.
இதில் வேலை செய்ய மூன்று பகுதிகள் அல்லது பாகங்கள் உண்டு. முதலாவது, சட்ட பாகம், இரண்டாவதாக, செயல் பாகம். மூன்றாவதாக, நீதி பாகம்.
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், மக்கள் தான் இந்த குடியரசு இயந்திரத்தை இயக்குபவர்கள்.
மக்களுக்கு தேவையான சட்டங்களை செய்வது சட்ட பாகம். இந்த சட்டங்கள் முக்கியமானவை. இந்த சட்டங்கள் என்ன சொல்லுகின்றனவோ, அதைத்தான் மற்ற இரு பாகங்களும் செய்யும்.
ஆரம்பக்காலத்தில் என்ன சட்டங்கள் எல்லாம் தேவையோ அதை மக்கள் சொன்னார்கள். இந்த சட்டபாகம் அதை செய்து கொடுத்தது. அதை நாம் அரசியல் சாசனம் என்கிறோம்.
மக்களுக்கு புதிய தேவைகள் வரும் பொழுது புதிய சட்டங்களை உருவாக்க, இந்த சட்டபாகத்தைத் தான் நாம் அணுக வேண்டும்.
அப்படி இயற்றப்பட்ட புதிய சட்டங்களோ பழைய சட்டங்களோ எதுவானாலும், செயல் பாகம் தான் அதனை செயல் படுத்த வேண்டும். இந்த இயந்திரத்தில் ஏதேனும் நடக்க வேண்டும் என்றால், நாம் அணுக வேண்டியது, செயல் பாகத்தை தான். சட்டப்படி ஏதேனும் நடக்கவில்லை என்றால், நாம் அணுக வேண்டியது நீதி பாகத்தை.
அதாவது, குடியரசு இயந்திரம் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது, சட்ட பாகம். இயந்திரத்தில் வேலை செய்வது செயல் பாகம். வேலை செய்யாமல் ரிப்பேர் ஆகிப்போனால் அதை சரி செய்வது நீதி பாகம்.
இதை தவிர, இவைகள் எல்லாம் ஒழுங்காக சட்ட படி வேலை செய்கிறார்களா, சட்டம் உருவாக்கும் பொழுது என்ன எண்ணங்களோடு உருவாக்கப்பட்டதோ அதன் படி சட்டங்கள் உபயோகப்படுத்தப் படுகிறதா என்பதை நேரடியாக அறிந்த கொள்ள, சட்டப்பாகம் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டது. அது தான் நாம் பார்க்கும், அமைச்சரவை! அது சட்டபாகத்துக்கு தேவையான விவரங்களை கொடுத்து புது புது சட்டங்களை உருவாக்குவதிலும், மாறுதல்கள் கொண்டு வருவதிலும் பெறும் பங்கு ஆற்றும்.
மக்களுடைய எண்ணங்களை அறிந்து, அதன் படி சட்டங்களை உருவாக்கவும், சட்டங்களை மாற்றி அமைக்கவும், மக்கள் ஒன்று கூட வேண்டும். நூற்று இருபது கோடி மக்கள் ஒன்றாக கூடி இந்த முடிவை எடுக்க முடியாது என்பதால், மக்கள் தங்கள் பிரதி நிதிகளை அனுப்பி வைக்கிறார்கள்.
இவர்களே சட்டமன்ற உறுப்பினர்கள்!
இவர்கள் சாலை போடுபவர்கள் அல்ல. இவர்கள் உங்களுக்கு ரேசன் கார்டு வாங்கி கொடுப்பவர்கள் அல்ல. இவர்கள் இவையெல்லாம் ஒழுங்காக நடக்க சட்டங்கள் செய்பவர்கள்!
இவர்கள் உங்களுக்காக உழைப்பவர்கள் தான்; இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், உங்களுக்கு தேவையான வேலைகள் ஒரு முறை நடப்பதற்கு ஏற்பாடு செய்பவர்கள் அல்ல. நீங்கள் எத்தனை முறை, அந்த வேலைக்காக குடியரசு இயந்திரத்திடம் சென்றாலும், உங்கள் சட்ட மன்ற உறுப்பினர் இருந்தாலும் இல்லாவிட்டலும், அது உங்கள் வேலையை செய்து கொடுக்க செய்பவர் தான் உங்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள்.
நீங்கள் தெரிந்தவர், தெரியாதவர்; பணக்காரர் ஏழை; ஆண் பெண்; பெரியவர் சிறியவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் அந்த இயந்திரம் வேலை செய்யும். செய்ய வேண்டும். இதை செய்ய வைப்பது சட்டங்கள் தான்.
குடியரசு இயந்திரம் சரியாக இயங்கவில்லை என்றால், சட்டங்கள் சரியாக இல்லை என்று அர்த்தம். இதற்கு காரணம், சட்டங்கள் இயற்ற தெரிந்தவர்கள் சட்ட மன்றத்தில் அமரவில்லை என்பது தான்.
அவர் நல்லவராக இருக்கலாம். அவர் சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்தவராக இருப்பதால், அவர் நம் கஷ்டத்தை அறிந்தவராகவும், புரிந்து கொண்டவராகவும் இருக்கலாம். ஆனால், சரியான சட்டங்களை ஏற்படுத்த தெரியாதவராக இருந்தால், அவரால் ஒன்றும் செய்ய இயலாது என்பதே உண்மை!
நம் எம்.ஜி.ஆர்.-ஐ விட நல்லது நினைப்பவர்கள் யாராவது இருக்க முடியுமா, என்ன?
அவருக்கு குழந்தைகளோ குடும்பமோ கிடையாது. அவர் நிறைய பணம் வைத்திருந்தார். புதுசாக அவருக்கு ஒன்றுமே தேவை இருக்கவில்லை. அவர் அனுபவிக்கதது என்ன இருக்க முடியும்? மக்கள் அவருக்கு எப்படி ஓட்டு போட்டார்கள் என்பதை நான் சொல்ல தேவையில்லை.
அப்படிப்பட்டவராலேயே இந்த இயந்திரத்தின் செயல் பாகத்தை சரியாக வேலை செய்ய வைக்க முடியவில்லை. அவர் ஒரு முறை சொன்னார், 'மக்கள் அரசு அலுவலகங்களுக்கு ஏதாவது வேலை வேண்டும் என்று செல்லும் பொழுது, ஒரு கத்தியோடு போங்கள்'. அவர்களுக்கு நீங்களே தண்டனை கொடுங்கள் என்று கூறிவிட்டார்!
அவரால் இது முடியாமல் போனதற்கு காரணம், அவர் அந்த இயந்திரத்தை வேலை செய்ய வைக்க, அதையே நம்பி இருந்தார்! அந்த செயல் பாகத்தில் இருப்பவர்களே செயல் பாகத்தை எப்படி சரி செய்ய ஒத்துழைப்பார்கள்?
கட்சிகள் முக்கியமல்ல, நீங்கள் அனுப்பும் உறுப்பினர்கள் முக்கியம். அவர்களுக்கு சட்டமன்றங்கள் எப்படி இயங்குகின்றன என்பது தெரிந்திருக்க வேண்டும். சட்டங்கள் உருவாக்க தெரிந்திருக்க வேண்டும். சட்டங்கள் மூலமாக செயல் இயந்திரத்தை கட்டுப் படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
தனி உறுப்பினர் கூட புதிய சட்டங்களை கொண்டுவர முடியும். சட்ட மாற்றங்களை கொண்டுவர முடியும். நமக்கு தேவை நல்ல சட்டமன்ற உறுப்பினர்கள்! கட்சிகள் அல்ல!
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!
இது குடியாட்சி. நமக்கு ஆட்சி தேவையில்லை! குடிகள் தான் ஆள்கிறார்கள்! நானும் நீங்களும் தான் ஆள்கிறோமே!
நமக்கு ஆள்வதற்கு கட்சிகள் தேவையில்லை! பெருந்தலைவர்கள் தேவையில்லை!
நமக்கு சட்டம் இயற்ற தெரிந்த சட்டமன்றங்கள் தான் தேவை!
சட்டம் இயற்ற தெரிந்த, மக்களின் தேவைகளை அறிந்த, காது கொடுத்து கேட்க தெரிந்த, அரசின் வேலை முறையை அறிந்த, தேர்ச்சி பெற்ற சிறந்த உழைப்பாளிகள் தேவை!
அவர்களை தேர்ந்தெடுத்து சட்ட மன்றத்திற்கு அனுப்புங்கள்!

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்?

யாருக்கு நம் ஓட்டு?

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயகாந்தன் படித்தேன்.